மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையேயான வன்முறை கடந்த மே 3-ந்தேதி பரவலாக வெடித்தது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். பலர் கடத்தி செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுபற்றிய வீடியோ காட்சிகள் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்த நிலையில், வன்முறைக்கு இடையே சம்பவ பகுதியில் இருந்து தப்பி செல்ல முயன்ற 19 வயது பழங்குடியின இளம்பெண் அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான சம்பவம் பற்றி புகார் அளித்துள்ளார். வன்முறை பகுதியில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட அவர், இதற்காக ஏ.டி.எம். ஒன்றிற்கு சென்றார். அப்போது, ஒரு கும்பல் அவரை கடத்தி சென்றுள்ளது. வெள்ளை நிற சொகுசு காரில் 4 பேர் அந்த இளம்பெண்ணை கடத்தி சென்றனர்.
வழியில் ஓட்டுநரை தவிர 3 பேரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டனர். இதன்பின்னர், மலை பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள், அவரை சித்ரவதைப்படுத்தி, துன்புறுத்தி உள்ளனர். இதுபற்றி இளம்பெண் கூறும்போது, என்ன கொடுமைகளை செய்ய முடியுமோ எல்லாவற்றையும் அவர்கள் செய்தனர். 3 பேரும் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. துப்பாக்கியின் பின்பகுதியை கொண்டு தாக்கினர். தண்ணீர் கூட தரவில்லை. காலையில், கழிவறை செல்ல வேண்டும் என கூறி, கயிறுகளை கட்டவிழ்க்கும்படி கேட்டேன். அவர்களில் ஒருவர் இரக்கப்பட்டு, கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
இதன்பின்பே, சுற்றி என்ன நடக்கிறது என அறிய முடிந்தது. அதன்பின், மலை பகுதி வழியே ஓடி, தப்பிப்பது என முடிவு செய்தேன் என கூறியுள்ளார். இந்த நிலையில், அந்த கும்பல் மற்றொரு ஊடுருவல் கும்பலிடம் அவரை விட்டு சென்றது என்றும் இளம்பெண் தெரிவித்து உள்ளார். அவர் தப்பித்து செல்லும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உதவி செய்து, பாதுகாப்பாக அழைத்து சென்றார். காய்கறி குவியல்களுக்கு இடையே மறைந்து தப்பியுள்ளார். காங்போக்பி நகரை சென்றடைந்த அவர், பின்னர் கோஹிமாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனை காங்போக்பி காவல் நிலையத்தில் புகாராக அவர் அளித்துள்ளார். சம்பவம் நடந்து 2 மாதங்கள் நடந்த நிலையில், கடந்த 21-ந்தேதியே புகார் அளிக்க முடிந்தது என அவர் கூறியுள்ளார். இம்பால் நகரில் உள்ள போராம்பத் காவல் நிலையத்திலும், கும்பல் பலாத்காரம், குற்ற உள்நோக்கம் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தல் உள்பட வழக்கொன்று பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சான்றுகள் எதுவும் இல்லாத சூழலில், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என போலீசார் கூறியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லாதது இந்த பெண்களுக்கு நீதி கிடைப்பது கேள்வியாக உள்ளது என வழக்கை விசாரித்து வரும் போலீசார் தெரிவித்தனர்.