தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரியை சேர்ந்த அய்யாவு மகன் தினேஷ்,32,. இவர் பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி, நடுக்காவேரி போலீசார் கடந்த ஏப்.8ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து போலீசார் தினேஷ் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாகவும், அவரை விடுவிக்க கோரியும், தினேஷின் தங்கைகளான மேனகா,31, கீர்த்திகா,29, இருவரும் விஷம் குடித்தனர்.
இருவரும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில, கடந்த 9ம் தேதி கீர்த்திகா உயிரிழந்தார். மேனகா சிகிச்சையில் உள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக, நடுகாவேரி போலீஸ் பொறுப்பு திருவையாறு இன்ஸ்பெக்டர் சர்மிளா நேற்றுமுன்தினம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால், இன்ஸ்பெக்டர் சர்மிளா மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தினேஷ் மீது பொய்யாகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசாரிடம் கீர்த்திகாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கீர்த்திகாவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து, நடுக்காவேரியில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து நேற்று மூன்றாவது நாளாக ஆர்.டி.ஓ., இலக்கியா, உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடலை பிரேத பரிசோதனை செய்ய சம்மதித்தனர். இருப்பினும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றத்திற்கு நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு உடலை வாங்குவதாக கூறி, உறவினர்கள் சென்றனர்.