கரூர் மாவட்டம், மண்மங்கலம் அடுத்த, புஞ்சை கடம்பக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு திருமண வரன் பார்க்க சொல்லி, கோவையைச் சேர்ந்த ஜெகநாதன், ரோஷினி, தேவகோட்டையைச் சேர்ந்த பாலகுமார் ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில், கோவை, ராமநாதபுரம், போத்தனூர் சாலையைச் சேர்ந்த ரேணுகா (36) என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணத்தின் போது 6- பவுன் தாலிக்கொடி, ஒரு பவுன் தங்கத்தோடு, அரை பவுன் மோதிரம் மற்றும் ரூபாய் 4 லட்சம் செலவு செய்து ரேணுகாவை திருமணம் முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு ரேணுகாவின் மற்றொரு அண்ணன், அவரது மனைவி, ரேணுகாவின் தங்கை என்று சொன்ன நந்தினி ஆகியோர் வந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேணுகாவிற்கு வந்த அலைபேசியை எடுத்து ரமேஷ் எதேச்சையாக பேசும்போது, பழனிகுமார் என்பவர், ரேணுகா என நினைத்து, பணம் நகைகளை எடுத்து வருவதாக கூறி ஏன் எடுத்து வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும், ரேணுகாவிற்கு மெய்யர் என்ற கணவரும், ஒரு மகளும், மகனும் உள்ளதாகவும், பின்பு பழனிகுமாருடன் 3- வருடம் தொடர்பில் இருந்து விட்டு,
பின்பு ராஜ், முபாரக் ஆகியோருடன் தொடர்பில் இருந்து, பின்பு கோவையில் இரண்டாவதாக லோகநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், சில நாட்களில் அவரது பணம், நகைகளை எடுத்து வந்து விட்டதாகவும், பின்பு அதே புரோக்கர்களை வைத்து, இந்த வழக்கின் புகார்தாரர் ரமேஷை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான புகைப்பட ஆதாரங்களை தனது மொபைல் போன் மூலம் ரமேஷ் படம் பிடித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா டிசம்பர் 15-ஆம் தேதி திருமணத்தின்போது ரேணுகாவுக்கு போட்ட நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி உள்ளார்.
இது தொடர்பாக ரேணுகாவின் ஏமாற்று வளையத்தில் உள்ள ஜெகநாதன் என்பவர் அலைபேசியில் ரமேஷை தொடர்பு கொண்டு 20- லட்சம் பணமும், 20 பவுன் நகையும் கொடுத்து விட்டால் பிரச்சனை ஏதும் செய்யாமல் விலகிக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் உன்னை வேறு திருமணம் செய்ய விடமாட்டேன் என்று தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக ரமேஷ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், ரேணுகாவை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி, நகை பணத்திற்காக பலரையும் ஏமாற்றிய கல்யாண ராணி ரேணுகா கைது செய்யப்பட்ட விவகாரம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.