படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரையிலான கடனுதவி வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வியாபாரம் சார்ந்த தொழில்களை தொடங்கிட ரூ.15 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கணும்
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற (ஆண் / பெண் இருபாலரும்) கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, 18 வயதுக்கு மேல் 45 வயது வரை இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினரான பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 55 க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், புதிய அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகளுக்கும், குன்றிய பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் மற்றும் ஆட்டிசம் மனவளர்ச்சி குறைபாடுள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் வயது வரம்பு 45 லிருந்து 55 ஆகவும் மற்றும் கல்வி தகுதியிலிருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கிட வங்கி மூலம் கடனுதவி பெற அதிகபட்சமாக வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சத்திற்கும் பரிந்துரைக்கப்படும். இதற்கான தமிழக அரசு மானியம், திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.3.75 இலட்சம் இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் நேரடி விவசாயம் தகுதியற்றவையாகும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றிட இதற்கான http://www.msmeonline.tn.gov.in/uyegp முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலினை பதிவிறக்கம் செய்து இரண்டு நகல்களில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட தொழில் மையம், உழவர் சந்தை அருகில், நாஞ்சிக்கோட்டை ரோடு தஞ்சாவூர் அலுவலகத்தினை நேரடியாகவோ அல்லது 04362- 255318,257345 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் இத்திட்டத்தில் கடந்த ஆண்டு 102 நபர்களுக்கு ரூ. 548.77 இலட்சம் வங்கி கடன் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பல்வேறு வகையிலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தங்களின் வேலை இல்லாத சூழ்நிலையால் பல்வேறு அவமானங்களை சந்திக்கின்றனர். இதனால் அவர்களின் செயல்பாடுகளில் தளர்வு ஏற்படுகிறது. மன உளைச்சல் உட்பட பல்வேறு காரணங்களால் அவர்களின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. பல நேரங்களில் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். ஆனால் இனி அதுபோன்று எவ்வித மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டாம். அரசின் இந்த திட்டங்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்