வீட்டு வேலை செய்யும் இளம்பெண் திடீர் மாயம்
திருச்சி பாலக்கரை, 7 -வது கிராஸ் மல்லிகை புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டு வேலைக்கு சென்ற விஜயலட்சுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 3 பேர் கைது
திருச்சி ஜீவா நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய பிரபாகரன். இவரது மனைவி ஹேமலதா (வயது 28). இவரது வீட்டிற்கு வந்த மூன்று பேர் ஹேமலதாவை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினர்.இது குறித்து ஹேமலதா கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த கங்கேஷ்குமார் சுரேஷ் ,ரவி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருச்சி மேலப்புலி வார்டுரோடு பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கோட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர் .அப்போது பூம்புகார் அருகே வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக தென்னூரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஜெயில் தெருவை சேர்ந்த முகமது யாக்கோப் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்டில் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காடவராயன் பட்டியை சேர்ந்தவர் வீரபாண்டியன். (வயது 54 ). இவர் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இவரது உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை இட்டனர்.அப்போது அவர் போலியான ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. உடனே உதவி இமிகிரேஷன் அதிகாரி அசோக்குமார் வீரபாண்டியனை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்து, புகார் அளித்தார். புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வீரபாண்டியனை கைது செய்தனர்.