தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி 25 வயது இளம்பெண். சம்பவத்தன்று இரவு லாரி ஓட்டுநரின் மனைவி, குழந்தையுடன் வீட்டில் தூங்கி உள்ளார். அப்போது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கத்தியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பாலியல் தொல்லை அளித்த இளைஞரை மடக்கிப்பிடித்து, ஏரியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் திருக்கோவிலூர் அடுத்த முகையூர் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர்(25) என்பதும், அவர் தற்போது நாகவதி அணை இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், தனது நண்பரான ஏரியூர் அடுத்த நெருப்பூரை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் அந்த பெண்ணுக்கும் பாலியல் தொல்லை அளித்ததும், அவரது தூண்டுதலின் பேரில் தானும் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, போலீசார் பிரான்சிஸ் சேவியர் மற்றும், மஞ்சுநாத் ஆகியோரை கைது செய்து, இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.