சென்னை , கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுகன்யா( 38). புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே. வாடகை கட்டடத்தில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கும் இவரது கடையை ஒட்டி மின் சாதனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்த பாலாஜி(26) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சுகன்யாவின் கடையில் திடீரென தீப்பிடித்து சுகன்யா உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து, கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ததில் சுகன்யா மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி கொலை செய்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இது தொடர்பாக, பாலாஜியின் தந்தை குமார் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில் பாலாஜி நேற்று கடையில் இருந்தார். அப்போது, காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பாலாஜியின் கடைக்குள் புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:வாலிபர் படுகொலை