Skip to content
Home » தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி, அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர், நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி. (21). இவர் அரியலூர் மாவட்டப் பகுதிகளில் பல்வேறு கோயில்களில் உண்டியல்களை உடைத்து திருடி வந்துள்ளார். அவை தவிர பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகன திருட்டிலும்,வழிப்பறியிலும் ஈடுபட்டு வந்தார். இவர் ஒரு இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றதைப் பற்றி அதன் உரிமையாளரிடம் சொன்னதற்காக மத்துமடக்கியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் காரை ஏற்றி கொல்ல முயன்றதில் அவர் சுதாரித்து தப்பியுள்ளார். இது தொடர்பாக அரியலூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் கடந்த 27.06.2023 ஆம் தேதி சின்னவளையம் காளியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து சாமி சிலையில் இருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளார். மறுநாள் 29.06.2023ந் தேதி ஜெயங்கொண்டத்தில் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்துள்ளார். இவை தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தமிழ்பாரதியை கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தமிழ்பாரதி இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் வெளியே வந்தால் மேலும் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், தமிழ்பாரதி மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத்தின் பரிந்துரையின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல்பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தமிழ்பாரதியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்பாரதி குண்டர் சட்டத்தின்படி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதியை மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!