கோவை, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார் நிறுத்தி விசாரித்த போது ஆத்திரமடைந்த போதை இளைஞர். போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை தகாத ஆபாச வார்த்தைகளில் திட்டிய இளைஞரை கண்டு அவ்வழியாக சென்ற
பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்க துவங்கினர். செய்வதரியாது திகைத்து நின்ற போலீசார் இளைஞரை சமரசம் செய்து அங்கிருந்து புறப்படுமாறு கெஞ்சி கூத்தாடினர் . ஆனால் அடங்காத போதை இளைஞரால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது. பின்னர் அங்கிருந்த போலீசார் போதை இளைஞரை அதிவிரைவு படை வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியதில்., பொள்ளாச்சி சமத்துவபுறம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பதும் ஒரு கால் முற்றிலும் அகற்றிய மாற்று திறனாளி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து உடன் வந்தவருக்கும் அந்த இளைஞருக்கும் அறிவுரை கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.