யூ டியூபர் சவுக்கு சங்கர் உயர் போலீஸ் அதிகாரிகளையும், பெண் போலீசாரையும் யூ டியூப்பில்தரக்குறைவாக விமர்சித்ததற்காக அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பெண் போலீசார் புகார் மனுக்கள் கொடுத்தனர். அதன்பேரில் கடந்த வாரம் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் கி்ரைம் போலீசார் அவரை கைது செய்து கோவைக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. திருச்சி உள்பட பல்வேறு நகரங்களிலும் சவுக்கு மீது புகார் கொடுக்கப்பட்டது. இது வரை அவர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரின் அவதூறு பேட்டியை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு போலீசார் தன்னையும் கைது செய்வார்கள் என கருதி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு கூறியதாவது:
யூ டியூப்களை கட்டுப்படுத்த இது தான் சரியான நேரம். பேட்டி கொடுப்பவரை விட பேட்டி எடுப்பவர் தான் முதல் எதிரியாக சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அவர் தான் அவதூறு கருத்துக்கள் வெளிவர தூண்டுகிறார். எனவே இந்த முன்ஜாமீன் மனு மீது போலீசார் ஒருவாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.