Skip to content
Home » உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

உலக அளவில் யோகா போட்டி…. தஞ்சை பகுதியை சேர்ந்த 5வயது சிறுவன் பங்கேற்பு…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு சித்தார்த் (வயது 5) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சித்தார்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார்.

சித்தார்த் இரண்டரை வயதில் இருந்தே யோகா பயிற்சி, சிலம்பம், வில் அம்பு, டேக்வாண்டோ, பாக்சிங் ஆகிய தற்காப்பு கலைகளை ஆர்வமாக விடாமுயற்சியுடன் கற்று வருகிறார். இதுவரை மூன்று நோபல் உலக சாதனை செய்து சான்றிதழ் பெற்றுள்ளார்.

அதில் மூன்று வயதில் முட்டையின் மேல் அர்த்த சமகோண ஆசனத்தில் 25 நிமிடம் தொடர்ந்து அமர்ந்து யோகாசனம் செய்து சாதனை படைத்துள்ளார். இதுவரை 30-க்கும் மேற்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளார். நோபல் உலக சாதனை புத்தகத்திலும் இவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

சிறு வயதிலிருந்தே இவரது பெற்றோர் மற்றும் யோகா சிலம்பக்கலை மாஸ்டர் முகமதுசபீர் ஆகியோரின் ஆக்கமும் ஊக்கமும் மற்றும் பெரும் முயற்சியால் சித்தார்த் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார். தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த மே மாதம் கொடைக்கானலில் நடைபெற்றது. அதில் யோகா போட்டியில் சித்தார்த் கலந்து கொண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் தேர்வு பெற்றுள்ளார். இந்த தேர்வின் மூலம் வரும் செப்டம்பர் மாதம் தாய்லாந்தில் உலகளவில் நடைபெறும் யோகா

போட்டியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் சார்பில் சித்தார்த் இந்தியா வீரராக போட்டியில் பங்கேற்க உள்ளார்.

மேலும் வில் அம்பு போட்டியில் தமிழ்நாடு அணி தேர்வுக்காக அக்டோபர் மாதம் நடைபெறும் போட்டியில் சித்தார்த் பங்கேற்க உள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பேன் என்று சிறுவன் சித்தார்த் நம்பிக்கையுடன் கூறினார்.

இதுகுறித்து சித்தார்த்தின் பெற்றோர் யோகராஜ் கூறும்போது, செப்டம்பர் மாதம் உலக அளவில் நடைபெறும் யோகா போட்டியில் பங்கேற்க தாய்லாந்துக்கு சித்தார்த் செல்ல உள்ளார். அதற்கான தீவிர பயிற்சி தற்போது மேற்கொண்டு வருகிறார். இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையை பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக் வரை சென்று சாதனை படைப்பார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!