பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். சுற்றுலா தலமாக ஏற்காட்டில் சனிக்கிழமை 144.4 மில்லி மீட்டர் மழையும் , ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என கனமழை கொட்டியது. காற்றுடன் பெய்த தொடர் மழையால் ஏற்காட்டில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஏற்காடு 60 அடி பாலம் அருகே ஏற்பட்ட மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் பல இடங்களில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டின் பல மலை கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சேலம் ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவினால் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல ஆட்சியர் பிருந்தா தேவி தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.