தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய வட உள் மாவட்டங்களுக்கு மேலும் 3 நாட்களுக்கு இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 5 டிகிரி பாரன்ஹீட் முதல் 9 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வட உள்மாவட்டங்களில் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஓரிரு இடங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது, 110 டிகிரி பாரன்ஹீட்டை தொடும் அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கும் எனவும், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வரை, அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.