மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக மயிலாடுதுறை காவிரி கரையில் இருந்து கங்கை முதலான பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடங்கள் மூன்று யானைகளின் மீது கொண்டுவரப்பட்டது.
மாயூரநாதர் அபயாம்பிகை யானை திருவையாறு ஐயாறப்பர் கோவில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி ஆகிய யானைகள் மீது புனித கடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தது. புனித கடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர் அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன.
யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு முகாம் நடைபெற்ற போது இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு யானைகளும் இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும் துதிக்கையால் பிணைந்தும் ஆரத்தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டன.
மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு யானை கர்ஜித்து முழக்கமிட்டது. யானை பாகன்கள் இரண்டு யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது. தொடர்ந்து இரண்டு யானைகளை யானை பாகன்கள் பைப்பில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து யானைகளுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்தனர். அப்போதும் உற்சாகத்துடன் யானைகள் கொஞ்சி குலாவி உற்சாக குளியலிட்டது பக்தர்களிடையே வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் யானைகளின் பாசப்பிணைப்பை செல்போனில் படம் பிடித்து மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.