Skip to content

இன்று கடைசி நாள்’ உலக டெஸ்ட் சாம்பியன் யார்? ..

ஆஸ்திரேலிய அணி 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அப்போது அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் (105 பந்து, 8 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், முகமது ஷமி, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.இதனை தொடர்ந்து இந்திய அணிக்கு 444 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியும் எட்டிப்பிடித்ததில்லை. 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி 418 ரன்களை எட்டிப்பிடித்ததே அதிகபட்சமாகும். மேலும் ஓவல் மைதானத்தில் 300 ரன்களை கூட எந்த அணியும் எட்டியது கிடையாது.  புதிய வரலாறு படைக்கும் முனைப்புடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட சுப்மன் கில் 18 ரன்னில் (19 பந்து, 2 பவுண்டரி) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தார். அப்போது எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். தேனீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்து இருந்தது. தேனீர் இடைவேளைக்கு பிறகு புஜாரா, தொடக்க வீரர் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 43 ரன்னில் (60 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) நாதன் லயனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரின் முடிவை எதிர்த்து அவர் செய்த அப்பீலுக்கு பலன் கிடைக்கவில்லை. அடுத்த ஓவரில் புஜாரா (27 ரன்கள், 47 பந்து, 5 பவுண்டரி) கம்மின்ஸ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து 2 விக்கெட் வீழ்ந்ததால் இந்தியா தடுமாற்றம் கண்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஹானே, விராட்கோலியுடன் கைகோர்த்தார். இருவரும் நேர்த்தியாக செயல்பட்டு அணியை சரிவில் இருந்து மீட்டு நம்பிக்கை அளித்தனர். நேற்றைய ஆட்டம் முடிவில் இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. விராட்கோலி 44 ரன்னுடனும் (60 பந்து, 7 பவுண்டரி), ரஹானே 20 ரன்னுடனும் (59 பந்து, 3 பவுண்டரி) ஆட்டம் இழக்காமல் உள்ளனர். 4-வது விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்திய அணியின் வெற்றிக்கு மேலும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளது.  வெற்றி யாருக்கு..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!