வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார். சோ.தர்மன் அளித்துள்ள பேட்டியில் ..“வாழை’ படம் பார்த்தேன். நான் எழுதிய சிறுகதை அப்படத்தில் அப்படியே இருப்பதாக நண்பர்கள் நிறைய பேர் சொன்னார்கள். படத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘வாழையடி’ என்ற சிறுகதையில் நான் எழுதியுள்ளேன். அதில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்தும் ‘வாழை’ படத்தில் அப்படியே இருக்கிறது.
சினிமாவுக்காக ஒரு சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் வரும் சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி – கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவைதான். வாழைத்தார் சுமப்பதன் மூலமாக இரண்டு சிறுவர்களுடைய உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது? இதுதான் என் கதையிலும் நான் பதிவு செய்திருக்கிறேன். மாரி செல்வராஜும் அதைத்தான் செய்திருக்கிறார். ஒருவேளை அவர் என்னுடைய கதையை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். அவரே வாழையையும் சுமந்திருக்கலாம். ஆனால் அந்த சிறுவர்கள் படக்கூடிய கஷ்டங்களுக்கு உருவம் கொடுத்தவன் என்ற முறையில் நான்தான் அதற்கு முழு உரிமையானவன்” என எழுத்தாளர் சோ. தர்மன் குறிப்பிட்டுள்ளார்..