மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது சீசன் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோதம்பி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு, 2023-ம் ஆண்டு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டில்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டிகள் வதோதரா, பெங்களூரு, லக்னோ, மும்பை ஆகிய 5 நகரங்களில் நடைபெறுகிறது. லீக் சுற்றில் 20 ஆட்டங்கள் உட்பட இந்தத் தொடரில் மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். 2 மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் நுழையும். பிளே ஆஃப் ஆட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி மார்ச் 15-ம் தேதி மும்பை பிராபர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.