ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போன்று பெண்களுக்கு பிரிமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) போட்டியை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. மும்பையில் நடந்த முதலாவது போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2-வது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மார்ச் 17-ந் தேதி வரை நடைபெறும் இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் முதல் 11 லீக் ஆட்டங்கள் பெங்களூருவிலும், அடுத்த 9 லீக் ஆட்டங்கள் மற்றும் வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்திலும் நடக்கிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணி இறுதிசுற்றை எட்டும்.
தொடக்க நாள் தவிர தினசரி ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.10 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படும். இன்று இரவு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கடந்த ஆண்டு 2-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி கடந்த சீசனில் 10 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 2 தோல்வியை சந்தித்தது.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் கடந்த ஆண்டு 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி கண்டது. இவ்விரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியதில் மும்பை 2 முறையும், டெல்லி ஒரு தடவையும் வெற்றி பெற்றன. மும்பை அணியின் பிரதான பலமே ஆல்-ரவுண்டர்கள் அதிகம் இருப்பது தான். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நாட் சிவெர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியா கெர் ஆகியோர் ஆல்-ரவுண்டராக மிரட்டக்கூடியவர்கள்.
பந்து வீச்சில் பூஜா வஸ்ட்ராகர், இஸ்சி வோங், ஷப்னம் இஸ்மாயில் வலுசேர்க்கிறார்கள். டெல்லி அணியில் பேட்டிங்கில் மெக் லானிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷபாலி வர்மா, அலிசி கேப்சியும், பந்து வீச்சில் திதாஸ் சாது, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ஜெஸ் ஜோனசென், மரிஜானே காப்பும் அசத்தக்கூடியவர்கள். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணியும், தங்களது ஆதிக்கத்தை தொடர மும்பை அணியும் வரிந்து காட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.