சையத் முஷ்டாக் அலி கோப்பையில் குரூப் சுற்றுகள் நடந்து வருகின்றன. இன்று நடக்கும் 111 ஆவது லீக் போட்டியில் சிக்கிம் அணியும் பரோடா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
மூன்றாவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்த பானு பனியா சிக்கிம் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 51 பந்துகளில் 5 பவுண்டரிகள் 15 சிக்சர்களை விளாசி 134 ரன்களைக் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். 10.5 ஓவர்களிலேயே பரோடா அணி 200 ரன்களைக் கடந்தது.
பின் வந்த ஷிவாலிக் ஷர்மா, விஷ்னு சோலான்கி முறையே 17 மற்றும் 16 பந்துகளில் தலா 6 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்திருந்தனர். 17.2 ஓவர்களிலேயே 300 ரன்களைக் கடந்த பரோடா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 349 ரன்களைக் குவித்தது. இதுவே, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும். முன்னதாக, நைரோபியில் காம்பியாவுக்கு எதிராக ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்களை இழந்து 344 ரன்களைக் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.