உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10-வது போட்டியில் நேற்றைய தினம் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிகாக், 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம், 44 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பவுமா (35 ரன்கள்), கிளாசன் (29 ரன்கள்), வான்டர் டுசன் மற்றும் மார்கோ யான்சென் தலா 26 ரன்கள் எடுத்தனர். 312 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. மார்ஷ், வார்னர், ஸ்மித், ஜோஷ் இங்க்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், ஸ்டார்க், லபுஷேன், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதில் லபுஷேன், 74 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். 40.5 ஓவர்களில் ஆல் அவுட்டாகி 177 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 134 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த உலக கோப்பை 2 போட்டிகளில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. +2.3 நெட் ரன் ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்கா. அதே சமயம் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுடன் விளையாடிய ஆஸ்திரேலியா 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் ஒன்பது லீக் ஆட்டங்களில் விளையாடும். இதில் அதிக புள்ளிகளை பெறும் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு செல்லும். தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா என இரு பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொண்டு தான் தோல்வியை தழுவி இருக்கிறது. இன்னும் ஆஸ்திரேலியாவுக்கு 7 லீக் ஆட்டங்கள் எஞ்சியிருக்கிறது. இதில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய பலம் குறைந்த அணிகளையும் ஆஸ்திரேலியா வென்றாலும் தற்போது பலமாக உள்ள இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளில் 3ல் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி போட்டிக்கு செல்ல வேண்டிய இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது.