அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக திறந்து விடக் கோரி, ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் மாட்டு வண்டி மணல் ஓட்டுநர் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒருங்கிணைந்த திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் கொள்ளிட ஆற்று படுகையில் நிறுத்தப்பட்டுள்ள மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில், மாட்டுவண்டி மணல் குவாரிகளை உடனடியாக திறந்து விடக்கோரி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரியலூர், திருச்சி, தஞ்சை மாவட்ட பகுதிகளில் கொள்ளிட ஆறு மற்றும் வெள்ளாற்று பகுதிகளில் 11 இடங்களில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆட்சிக்கு வந்தால் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்கப்படும் என திமுக அரசு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த கட்டமாக தலைமைச் செயலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒன்று கூடி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அரியலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.