திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம் எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை பிற்பகலில் பணி முடிவடைய சிறிது நேரமிருந்த நிலையில், பணிமனையின் உள் பகுதியில் உள்ள 3 ஆவது ஷண்டிங்க் பாதையில், அவர் ரயில் என்ஜினுக்கு அடியில் சடலமாக கிடப்பதாகவும், தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து சக தொழிலாளர்கள் நிகழ்விடத்தில் குவிந்தனர். அங்கு முருகன் உடல் சந்தேகத்துக்கிடமான வகையில் ரயில் என்ஜினின் அடிப்பகுதியில் துண்டான நிலையில் கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில், பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பணிமனையில் அண்மைக்காலமாகவே வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், தமிழக தொழிலாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில், முருகேசன் திடீரென உடல் துண்டான நிலையில், இறந்து கிடப்பது சக தொழிலாளர்களுக்கிடையே சந்தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பணிமனை உள்பகுதியில் உள்ள ரயில் பாதையில், பராமரிப்பு பணிகளுக்கு வரும் ரயில் என்ஜின்கள் மிகவும் மெதுவாகவே செல்லும். அவ்வாறிருக்க, முருகேசன் தற்கொலை செய்யும் நோக்கில் படுத்திருந்தால் ரயில் ஓட்டுநர் என்ஜினை நிறுத்தியிருக்க முடியும். அல்லது அவர் திடீரென குறுக்கே பாய்ந்திருந்தால் உடல் சிதைந்து இறந்திருக்க கூடும். ஆனால் அவரது உடலின் ஒரு பகுதி வெளியிலும் ல் இடுப்புக்கு மேல்பகுதி தண்டவாளத்தின் நடுவிலும் உள்ள நிலையில் படுக்க வைத்திருப்பது போல கிடந்தது. எனவே இது குறித்து பல்வேறு சந்தேகங்களை தொழிலாளர்கள் எழுப்பியுள்ளனர்.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது, யாரேனும் அவரை கொலை செய்யும் நோக்கில் தண்டவாளத்தில் படுக்க வைத்தனரா என்ற வகையிலும், சாவுக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பொன்மலை ரயில்வே பணிமனையில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.