Skip to content
Home » உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

உறையூர் பத்திரப்பதிவு ஆபீசில் ஐடி ரெய்டு…. சிக்கும் முக்கியப்புள்ளிகள்?

சென்னை செங்குன்றம் மற்றும்  திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர்  நேற்று முன்தினம்  மதியம் திடீரென  சோதனை நடத்தினர்.  வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த 10க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய  இந்த சோதனைமேற்கொண்டனர். நேற்று காலை தான் சோதனை முடிவடைந்தது.

இந்த சோதனையில்  செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியும், உறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1000 கோடியும்  கணக்கு காட்டப்படவில்லை என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து உறையூர், செங்குன்றம் சார்பதிவாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் மீது தமிழக பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

இந்த இரு அலுவலகங்களை வருமானவரித்துறை  குறிவைத்து ரெய்டு நடத்தியது ஏன் என்பது  குறித்து பல புதிய தகவல்கள் கிடைத்து உள்ளது.  இந்த இரு சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குள் நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ததாக  பல புகார்கள்  ஐடி அதிகாரிகளுக்கு  சென்றதாகவும், அதைத்தொடர்ந்தே இந்த    ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்த  நபர்கள்  பற்றிய விவரங்களை ஐடி அதிகாரிகள் சேகரித்ததாகவும், இனி சம்பந்தப்பட்டவர்கள்  விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் அதில் பல முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.

வருமானவரித்துறை ஆய்வு குறித்து  தமிழ்நாடு அரசு பதிவுத்துறை விளக்கமளித்து இருக்கிறது. இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, “வருமான வரி சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்ததும் ரூ 30 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்படுகிறது.

இந்த படிவம் 61A என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விவரங்கள் தவறாமல் மேலேற்றம் செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை மூலம் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி மேற்கண்ட விவரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் அந்தந்த பதிவு அலுவலரால் வருமான வரித்துறை இணையதளத்தில் மேலேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

4.7.2023 அன்று திருச்சி பதிவு மாவட்டம் உறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டம் ரெட்ஹில்ஸ் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருமான வரித்துறையினர் நேரில் வந்தனர். 2017-2018 ம் நிதி ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் அவர்களால் கோரபட்டதற்கு இணங்க வழங்கப்பட்டன. தேவையான தகவல்களை நேரில் சரிபார்க்கவும் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. இவ்விரு அலுவலகங்கள் குறித்தும் கூடுதல் விவரங்கள் வருமான வரித்துறையினரால் அந்தந்த சார்பதிவாளர்களிடம் கோரப்பட்டுள்ளது. இவ்விபரங்கள் விரைவில் வருமான வரித்துறைக்கு அனுப்பப்படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விவரங்களை மேலேற்றம் செய்யாத இவ்விரு அலுவலகங்களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய காலத்திற்குள் மேலேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!