தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் தேர்வெழுத சென்ற மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டது. அவர்கள் அரை மணிநேரம் காத்திருந்து பின்னர், புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி கூறும்போது, பெண்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு தங்களை ஆடைகளை கொண்டு மூடி, மறைத்து கொள்ள வேண்டும். பெண்கள் குட்டை ஆடைகளை அணியும்போது அதனால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என கூறியுள்ளார்.
நம்முடைய கொள்கை முழுவதும் மதசார்பற்ற ஒரு கொள்கை. ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிவதற்கான உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் இந்து அல்லது இஸ்லாமிய வழக்கத்தின்படி ஆடைகளை அணிய பழகி கொள்ள வேண்டும். ஐரோப்பிய கலாசார ஆடைகளை பின்பற்ற கூடாது. நம்முடைய ஆடை கலாசாரங்களை நாம் மதிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
புர்கா அகற்றிய சம்பவம் பற்றி தெலுங்கானா உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலியிடம், எங்களுடைய பெற்றோர் புகார் அளித்து இருக்கிறார்கள் என மாணவிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரம் பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி முகமது மஹ்மூத் அலி கூறியுள்ளார்.