திமுக தேர்தல் வாக்குறுதியாக கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாதம் ரூ.1000 வீதம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்ணா பிறந்த நாளான கடந்த 15ம் தேதி தமிழ் நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற இடங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத்துக்கு தலா ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது.
பல லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளது. அவர்களது விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் மட்டத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கும்போது தவறுகள் நேர்ந்திருந்தால் , அதை குறிப்பிட்டடு மீண்டும் விண்ணப்பித்தால் அந்த விண்ணபங்களும் பரிசீலிக்கப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள், உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பங்களை சரி செய்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் புதிதாக விண்ணப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறி உள்ளார். எனவே இந்த வாய்ப்பினை குடும்பத்தலைவிகள் பயன்படுத்திக்கொள்ளும்படி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டுள்ளார்.