Skip to content
Home » 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை……தடையை மீறி வந்தேன்…… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை……தடையை மீறி வந்தேன்…… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த   கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி 1 கோடிய 6 லட்சம் பேருக்கு  உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தொண்டைவலி இருந்தாலும் தொண்டு செய்வதில் தொய்வு இருக்கக்கூடாது என வந்தேன்.   இந்த விழாவுக்கு வந்ததால்  வலி குறைந்து மனது மகிழ்ச்சியாய் இருக்கிறது.   இந்த தொகையை வாங்கும்போது  உங்களுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படுகிறதோ, அதைவிட  இந்த தொகையை  கொடுக்கும்போது எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படுகிறது.

அது தான் எனக்கு மருந்து. டாக்டர் அறிவுரையை மீறி  இங்கு வந்துள்ளேன். தேர்தல் நேரத்தில் இந்த வாக்குறுதியை அளித்தபோது   நிறைவேற்ற  முடியாத வாக்குறுதி என சிலர் விமர்சித்தனர்.  ஆட்சிக்கு வரமாட்டாங்க, அதனால் சொல்றாங்க என்றனர்.  சிலர் கட்டம் போட்டு பார்த்தர்கள்.

திமுக ஆட்சிக்கு வரும், வரணும் , அதுவும் கலைஞர் மகன் ஸ்டாலின் ஆட்சிக்கு வரணும் என்று வாக்களித்தீர்கள். . முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னதை செய்வான். அதற்கு அடையாளமாக  இந்த உரிமைத்தொகை 1000 கொடுக்கிறோம். சொன்னதை செய்ததால் உங்கள் முன் கம்பீரமாக நிற்கிறேன்.

செப்டம்பர் 15ம் தேதி  மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை  காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தேன்.  செப்டம்பர், அக்டோபர் மாதங்களில்  தலா 1 கோடியே 6 லட்சம் பேருக்கு  இந்த தொகை வந்தது. இன்று மாலைக்குள் இந்த மாதத்திற்கான  தொகை வந்து விடும்.

பெண்களுக்கு  சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு,  உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு இப்போது மகளிர் உாிமைத்தொகை  திமுக அரசு வழங்கியது.  தேவையுள்ளவர்களுக்கு இந்த தொகை கிடைக்க வேண்டும்.

இந்த தொகைக்காக பெண்கள்  அலைச்சல்படக்கூடாது என்பதற்காக வீடு தேடி வந்து  அரசே விண்ணப்பங்களை வழங்கியது. அதை ஆங்காங்கே முகாம்கள் அமைத்து பெற்றது. இந்த முகாமை  ஜூலை 24ம் தேதி தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நான் தொடங்கி வைத்தேன்.

இந்த உரிமைத்தொகையை பெற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கான விதிமுறைகள் அறிவித்தோம். தமிழகத்தில்  2.24 கோடி ரேஷன்கார்டுகள் இருந்தபோது,  1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் தான் வந்தது. மற்றவர்கள் தங்களுக்கு இந்த விதிமுறை  பொருந்தாது என புரிந்து கொண்டு விட்டனர்.  எனவே தகுதி பற்றி விமர்சித்தவர்கள்  அடங்கி போய்விட்டார்கள்.

வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மணிார்டர் மூலம் அனுப்பினோம். தொடர்ந்து அவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க  நடவடிக்கை  மேற்கொண்டு வருகிறோம்.  இந்த திட்டம் இந்தியாவுக்கே முன்னுதாராணமாக அமைந்து உள்ளது.

தகுதி இருந்தும் கிடைக்காத  விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டது. இதற்காக  54ஆயிரத்து 260 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு  சரிபார்க்கப்பட்டது. புதிதாக இன்று  7 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.  அந்த சகோதரிகளுக்கும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்துடன்  மொத்தம் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 பேர் இந்த திட்டத்தின் மூலம் உரிமைத்தொகை பெறுவார்கள்.  தகுதி உள்ள யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.  விடுபட்டவர்களுக்கு, ஏன்,  கிடைக்கவில்லை என குறுஞ்செய்தி அனுப்பினோம். மேல் முறையீடு செய்தவர்களுக்கு  டிசம்பருக்குள் வழங்கப்படும்.  தகுதி உள்ள எல்லாருக்கும்  உரிமைத்தொகை கிடைக்கும்.  அதுவரை எங்கள் பணி  நடக்கும்.  இது தான்  இந்த திட்டத்தின் மிகப்பெரிய  வெற்றி.   ஒரு திட்டம் வெற்றிபெற வேண்டும் என்றால் தொடர்ந்து அதனை கவனிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் இந்த திட்டம்  தொடங்கப்பட்டபோது கூட்ட நெரிசலில் மக்கள் அவதிப்பட்டதை பார்த்தோம். ஆனால் தமிழகத்தில் அமைதியான முறையில், சர்ச்சை  இல்லாமல் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.  இதற்கு அரசு அலுவலர்கள் தான் காரணம்.  இந்த துறைக்கு பொறுப்பேற்றுள்ள தம்பி உதயநிதி  தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

தலைமை செயலாளர் 50 முறை ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.  அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர்,  மாவட்ட கலெக்டர்கள்,  உயர் அலுவலர்கள், விஏஓக்கள்,  ஊராட்சி செயலாளர்கள், தன்னார்வலர்கள் என அனைவரும்  இதற்காக பாடுபட்டார்கள்.  ஊர் கூடி தேர் இழுத்தார்கள். அதனால் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஊடகங்களே இதனை வியந்து பார்க்கிறது.  இதுபோல தமிழ்நாடு முழுவதும் இந்த 2ம் கட்ட உரிமைத்தொகை வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ள சகோதரிகள்  அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மேயர்  பிரியா,  தலைமை செயலாளர்  சிவதாஸ் மீனா,  மாநகராட்சி ஆணையர்  ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *