தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதில், முக்கியமாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவிய நிலையில், பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
மேலும், இந்த திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.