பல்வேறு மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டம் தொடங்கிய நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைமேலகரம் ஊராட்சி அலுவலகம் முன்பு 8 மாத காலமாக 100 நாள் வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து 100 நாள் வேலை கேட்டு வார்டு உறுப்பினர் ரமேஷ், ராஜா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் இன்றி 100 நாள் வேலை வழங்க கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் கலெக்டர் சபீர் ஆலம், மற்றும் குத்தாலம் காவல் ஆய்வாளர் ஜோதி ராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் ஆட்சியர் உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.