பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 8-ம் தேதி(மகளிர் தினம்) குஜராத்தின் நவ்சாரியில் மாநில அரசின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ‘லக்பதி தீதி சம்மேளனம் (பணக்காரச் சகோதரி)’ எனும் திட்டம் தொடர்பான இந்நிகழ்ச்சியானது, வழக்கத்தை விட மாறுபட்டதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இது மாதிரியான ஏற்பாடு இந்திய வரலாற்றில் முதல் முயற்சி ஆகும்.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, குஜராத் காவல்துறை ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்து வருகிறது.
பிரதமர் மோடி நவ்சாரியின் வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கியது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரையிலும் பெண்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் இருப்பர். இந்த காவல் பணியில் உள்ள பெண்களில் குஜராத் காவல்துறையினரின் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல் கான்ஸ்டபிள்கள் வரை அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள்.” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சுமார் 2,100 கான்ஸ்டபிள்கள், 187 சப்-இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகளில், 16 துணை போலீஸ் காவல் கண்காணிப்பாளர்கள், ஐந்து காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் மற்றும் கூடுதல் டிஜிபி அந்தஸ்து கொண்ட அதிகாரியும் இடம்பெற உள்ளார்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பில் இவர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பர். இந்நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, குஜராத்தின் மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான நிபுனா டோரவனேவிடம் அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் அரசின் இந்த முயற்சி மகளிர் தினத்தன்று சர்வதேச அளவில் ஒரு வலுவான செய்தியை சொல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தை பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவதில் பெண்களின் பங்கு என்ன என்பதையும் இது விவரிக்கும் என்றும் கருதப்படுகிறது.