Skip to content
Home » சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற ஈரோடு பெண் திடீா் தர்ணா…. வீடு யாருக்கு சொந்தம்?

ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 49). இவருடைய மனைவி ரஜிதா (35). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். இந்த நிலையில் கருங்கல்பாளையத்தில் உள்ள வீடு தனது பெயரில் இருப்பதாகவும், அந்த வீட்டில் இருந்து கணவர் வெளியேற வேண்டும் என்றும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ரஜிதா புகார் கொடுத்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக ஸ்ரீகுமாரிடம் முறையிடுவதற்காக கருங்கல்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு ரஜிதா நேற்று காலை சென்றார். அப்போது அவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ரஜிதா கூறியதாவது:- எனக்கும், எனது கணவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பு விவாகரத்து ஆனது. எனது வீட்டில் இருந்து வரதட்சணையாக கொடுத்த நகை மூலம் கட்டிய வீடு. எனது பெயரில்தான் உள்ளது. தற்போது வங்கி கடனில் இருப்பதால் வீட்டை ஜப்தி செய்வதற்கு வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வீட்டை விற்க முடிவு செய்தபோது அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் வீட்டை வாங்க முன்வந்தார்.  வங்கியில் நிலுவையில் இருந்த கடன் ரூ.18 லட்சத்தை அவரே செலுத்தினார். மீதமுள்ள பணத்தை வீடு பத்திரம் கிரையம் செய்யும்போது கொடுப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே வீடு மீட்கப்பட்ட தகவல் கிடைத்ததும் எனது கணவர் ஸ்ரீகுமார் வீட்டில் வந்து குடியேறினார். இந்த வீட்டில் இருந்து எனது கணவர் வெளியேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன்.  இவ்வாறு அவர் கூறினார்.

கதவு திறக்கப்படாததால் ரஜிதா ஏணி மூலமாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றார். பிறகு சுற்றுச்சுவர் கதவின் பூட்டை உடைத்து கதவை திறந்தார். அவருடன், வீட்டை வாங்க வந்த விஜயகுமார் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் சிலர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றார்கள். அங்கிருந்த ஸ்ரீகுமாரிடம் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ரஜிதா கூறுகையில், “எனது பெயரில் உள்ள இந்த வீட்டில் எனக்கும், எனது மகன்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும்”, என்றார். இதேபோல் ஸ்ரீகுமார் கூறுகையில், “இந்த வீடு என் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கியது. என்னை மிரட்டி இந்த வீட்டை அவரது பெயரில் மாற்றி எழுதிவிட்டனர். இதனால் சட்டப்படி கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்”, என்றார். இந்த பேச்சுவார்த்தை மாலை வரை நடந்தது. அதன்பிறகு இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!