காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 8-ம் தேதி டில்லியில் இருந்து இமாசல பிரதேசம் சென்று கொண்டிருந்தார். அரியானா மாநிலத்தில் சென்றபோது அங்கு வயலில் விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டிருப்பதை அவர் பார்த்தார். உடனே அவர் காரை நிறுத்தி விட்டு வயலுக்குச் சென்றார். அவரது வருகையை எதிர்பார்க்காத விவசாயிகள் ராகுல் காந்தியை உற்சாகத்துடன் வரவேற்றனர். அவர்களிடம் ராகுல் காந்தி விவசாயம் மற்றும் விளைபொருட்கள் குறித்து பல்வேறு விஷயங்களை கேட்டறிந்தார். திடீரென அவர் தான் அணிந்திருந்த முழுக்கால் பேண்டை முட்டி வரை மடித்து அரைகால் டவுசருடன் வயலில் இறங்கினார். அதன்பின் விவசாயிகளுடன் இணைந்து வயலில் நாற்றுகளை நட்டார். வயலில் சிறிது தூரம் டிராக்டர் ஓட்டினார்.
ராகுல் காந்தியின் இந்தச் செயலை விவசாயிகள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இதையடுத்து ராகுல் காந்தி விவசாயிகளிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது, சில பெண் விவசாயிகள் டில்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டைப் பார்க்க விருப்பம் தெரிவித்தனர். விவசாயிகள் இந்தியாவின் பலம். அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களின் கருத்தைப் புரிந்து கொண்டால் நாட்டின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், சோனியா காந்தி அரியானா பெண் விவசாயிகளை மதிய உணவிற்கு வருமாறு அழைத்தார். அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடும் செய்தார். இந்த அழைப்பை ஏற்று நேற்று அரியானாவைச் சேர்ந்த சில பெண் விவசாயிகள் சோனியா காந்தி இல்லம் வந்தனர். அவர்களை வரவேற்ற சோனியா காந்தி அவர்களுடன் நடனமாடியதுடன், மதிய உணவையும் பரிமாறி மகிழ்ந்தார். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.