பெண்ணிடம் நகை பறிப்பு…
ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (வயது 52). இவர் திருவரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் முத்து செல்வியின் கழுத்தில் கிடந்த ஆறரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார். அப்போது முத்துச்செல்வி திருடன் ….திருடன் …..என கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் திரண்டு ஓடி நகை திருடிய வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கரூர் மாவட்டம் குளித்தலை ஆர்.டி.மலை தெற்கு தெருவை சேர்ந்த பிச்சைமுத்து மகன் சுகுமார் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 1/2 பவுன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.
பயணியிடம் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது ஒரு பயணி தனது லக்கேஜில் இந்திய மதிப்பில் ரூபாய் 16 லட்சத்து 52 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வைத்திருந்தது தெரியவந்தது.இதனையடுத்து அந்த பயணியை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.அவர் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருந்தார்.அதற்குரிய எந்த ஆவணமும் அவரிடம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கார் டிரைவர் தற்கொலை…
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவரது மகன் பார்த்திபன் (வயது 31 ) .கார் டிரைவர். குடிப்பழக்கம் உடையவர் . இவர் கிருஷ்ணவேணி (வயது 27) என்பவரை காதலித்து ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விரக்தியில் பார்த்திபன் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பார்த்திபனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் பார்த்திபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிரேத கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாடுகளை திருடிய வாலிபர் கைது
திருச்சி ஸ்ரீரங்கம், மேலூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). மாடு மேய்ப்பவரான இவர் சம்பவத்தன்று மேலூர் ரோடு கணபதி தோட்டம் அருகே 11 மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது 4 மாடுகளை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் திருவரங்கத்தை சேர்ந்த ரமேஷ் (37) என்பவருக்கு சொந்தமான மாட்டையும் மர்ம நபர் திருடி சென்று இருந்தார். இதுகுறித்து ரவிச்சந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரிண்பேரில் திருவரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாடுகளை திருடியது திருவள்ளூர் மாவட்டம் கொச.வன்பேட்டையை சேர்ந்த முகுந்தன் (27) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் முகுந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
