சென்னை பாரிமுனையில் உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலில் அர்ச்சகராக இருந்தவர் கார்த்திக் முனுசாமி(45). இவர் கோவிலுக்கு வந்த ஒரு பெண்ணிடம் நெருங்கி பழகினார்.
சம்பவத்தன்று தனியாக வந்த அந்த பெண்ணுக்கு தீர்த்தம் கொடுப்பதாக மயக்க மருந்து கலந்த தண்ணீரை கொடுத்தார். அதைக்குடித்ததும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பெண்ணை தனது காரிலேயே வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்று பலாத்காரம் செய்து விட்டார். அதை அவர் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததுடன், விபசார தொழிலில் தள்ளவும் சதி திட்டம் போட்டுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் விருகம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.