சென்னை அடுத்த திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 9 மணிக்கு 6-வது நடைமேடையில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. அப்பொழுது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்பொழுது உடலில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக பெண் ஒருவர் நடைமேடையில் படுத்துக்கொண்டு கதறிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் திருவள்ளூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது உடலில் ஆடை ஏதும் இல்லாமல் நிர்வாணப்படுத்தப்பட்ட நிலையில் முகம், கை கால், வயிறு, மார்பு உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் பிளேடு கத்தியால் அறுத்து உடலில் ரத்தம் வடிந்த நிலையில் பெண் ஒருவர் கத்திக் கொண்டிருப்பது தெரிந்தது.
இதையடுத்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்தப் பெண் அம்பத்தூர் அடுத்த அண்ணனூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த மங்கை ( வயது 45) என தெரிய வந்தது. அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் அந்த பெண்ணை திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளார். பின்னர் கஞ்சா போதையில் பாலியல் தொந்தரவு கொடுத்து அந்த பெண்ணை கையில் வைத்திருந்த பிளேடு கத்தியால் முகம், கை, வயிறு, மார்பு, கால்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு இடங்களில் அறுத்து உள்ளார்.
பின்னர் அந்த பெண் சத்தம் போட்டதும் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6 பிளாட்பாரங்களிலும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததே இந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூர செயலுக்கு காரணம் என கூறப்படுகிறது. திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தின் கடைசி பகுதிகளில் சமூக விரோதிகள் பாலியல் தொழில் செய்வது, கஞ்சா, மது போன்றவற்றை அருந்துவது போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறப்படுகிரது.
ரெயிலில் இருந்து இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து செல்லும் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. சில நேரங்களில் பெண்களிடம் ஆபாசமாக பேசி கிண்டல் செய்வதும் வழிப்பறியில் ஈடுபடுவதும் பெண்களின் உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு முறையாக கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.