திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சவுக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவரது மனைவி சுகன்யா (வயது 32). இவர் தனது உறவினர்களுடன் நேற்று முன்தினம் தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் வரை செல்லும் முன்பதிவு இல்லாத அந்தோதயா ரயிலில் ஏறி கும்பகோணத்திற்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை கும்பகோணம் வந்ததும் ரயிலில் இருந்து இறங்கினார். பின்னர் பஸ் நிலையம் செல்வதற்காக ஆட்டோவில் ஏற முயன்றார். அப்போது தான் கொண்டு வந்திருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தக் கைப்பையில் 17 கிராம் தங்க நகைகள், 340 கிராம் எடையுள்ள 3 ஜோடி கொலுசு , செல்போன் , டேப் மற்றும் ரூ.565 ரொக்கம் ஆகியவை இருந்தது. இதுகுறித்து சுகன்யா
கும்பகோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அவர்கள் உடனடியாக தஞ்சாவூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப் -இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் , சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் சுகன்யா பயணம் செய்த அந்தோதயா ரயில் தஞ்சாவூர் வந்து நின்றபோது அதில் ஏறி சோதனை செய்தனர். அதில் சுகன்யா தவறவிட்ட நகைகளுடன் கூடிய கைப்பையை பத்திரமாக மீட்டனர் . பின்னர் அவரை தஞ்சாவூருக்கு வரவழைத்து கைப்பையை வழங்கினர். ரயிலில் பயணம் செய்யும்போது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.