தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின் மூடிகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் செடிகள், ஐஸ்பெட்டிகள், வைக்கோல்களை சேதம் அடைந்த மூடியின் மீது போட்டு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தஞ்சை சீனிவாசபுரம் செக்கடி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியின் மூடி சேதம் அடைந்ததால் அதன் மீது வைக்கோல் போடப்பட்டுள்ளது. நேற்று செக்கடி பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது45) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் பாதாள சாக்கடை குழியின் மீது போடப்பட்டிருந்த வைக்கோல் மீது ஏறி சென்றபோது தடுமாறி கீழே விழுந்தார். இதில் சாந்திக்கு கால் முறிவு ஏற்பட்டது. அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இதே போல் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து செடிகள் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் புதிதாக வருவார்கள் விபத்தில் சிக்கி வருகிறார்கள். எனவே தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை மூடிகளை சரி செய்து வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.