தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவர் சென்னையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு கனிப்பிரியா என்ற பெண் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் அவரது தோழி என்று தீபிகா என்பவரும் அறிமுகமாகி உள்ளார். இந்நிலையில் சொந்த ஊரான திருவிடைமருதூர் பகுதிக்கு அந்த வாலிபர் திரும்பி வந்துவிட்டார். தற்போது அப்பகுதியில் தனியார் வங்கி சார்ந்த பணியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒரு பெண் சென்னையில் அறிமுகமான கனிப்பிரியாவின் தோழி தீபிகா என்று தெரிவித்துள்ளார். இதனால் நம்பிக்கையடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். அப்போது தனது உறவினர் வெளிநாட்டில் இருப்பதாக தெரிவித்த இளம் பெண் அந்த வாலிபரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய வாலிபர் விசா மற்றும் இதர கட்டணங்களுக்காக அந்த பெண் கூறிய வங்கி கணக்கில் ரூ.1.70 லட்சம் பணத்தை மூன்று தவணைகளில் செலுத்தி உள்ளார். சில நாட்கள் கடந்த நிலையில் எவ்வித தகவல்களும் இல்லாததால் அந்த பெண்ணை தொடர்பு கொள்ள வாலிபர் முயற்சி செய்துள்ளார். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. பணமும் திருப்பி தரப்படவில்லை. இதுகுறித்து கடந்த 19ம் தேதி தஞ்சை சைபர் க்ரைம் போலீசில் அந்த வாலிபர் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த வாலிபர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு மற்றும் செல்போன் டவர் ஏரியா ஆகியவற்றை ஆய்வு செய்து கோவையில் இருந்த தீபிகாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை தஞ்சைக்கு அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்த அடுத்த 5 நாட்களுக்குள் விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுத்த சைபர் க்ரைம் போலீசாருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறியதாவது: தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறி தங்களின் வங்கி கணக்கு விபரம், ஏடிஎம் கார்டு விபரம், ரகசிய எண் போன்றவற்றையும் ஓடிபி எண் ஆகியவற்றையும் கேட்டால் கண்டிப்பாக தெரிவிக்க கூடாது. உங்கள் இடத்தில் மொபைல் டவர் அமைக்க உள்ளோம். பல லட்சம் அட்வான்ஸ், மாதாமாதம் பல ஆயிரம் வாடகை தருகிறோம் என்று கூறி ஆவணங்களை அனுப்புங்கள், பணம் அனுப்புங்கள் என்று தெரிவித்தால் அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்கவோ, பணம் அனுப்பவோ கூடாது.
பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி வரும் எவ்வித தகவல்களையும் நம்பக்கூடாது. எஸ்எம்எஸ், இ-மெயில், ஆன்லைன் வேலை வெப்சைட் வாயிலாக விளம்பரங்களை அனுப்பி ஏமாற்றக்கூடும். அவர்கள் ஏதேனும் காரணம் கூறி பணம் கட்டச் கூறினால் ஏமாந்து விடக்கூடாது என்று தெரிவித்தன.