கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த 13-ஆம் தேதி இருவரும் வெளியே சென்ற நேரத்தில் பிற்பகல் 12 30 மணியளவில் பூட்டி இருந்த வீட்டுக் கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்க வளையல்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டதாக பாதிக்கப்பட்ட நகுல்சாமி சிசிடிவி ஆதாரங்களுடன் வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வெள்ளியணை பகுதியை சேர்ந்த ரஞ்சிதா (30) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.