Skip to content
Home » சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

  • by Authour

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா். இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது.

கடந்த 15-ந்தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும், அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்ததும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.

சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இது போன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *