தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சொகுசு காரில் சுற்றுலா சென்றனர். அந்த காரில் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்தார். டிரைவருக்கும் வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப்பை பார்த்து மட்டுமே காரை செலுத்தினார்.
வழியில், கோட்டயம் வந்த போது, ஆற்றுக்குள் கார் விழுந்தது. உள்ளே இருந்தவர்கள் தத்தளித்தனர். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால், கார் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு கூகுள் மேப் உதவியுடன் காரை ஓட்டி வந்த டாக்டர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து மழைகாலத்தில் கூகுள் மேப் உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் சுற்றுலா வருபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.