‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் கார்லஸ் அல்காரசும் (ஸ்பெயின்), 7 முறை சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா) கோதாவில் குதித்தனர். எதிர்பார்த்தபடியே முதல் வினாடியில் இருந்தே களத்தில் அனல் பறந்தது. தொடக்கத்திலேயே அல்காரசின் இரு சர்வீஸ்களை முறியடித்த ஜோகோவிச் முதல் செட்டை அதிக சிரமமின்றி கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி மட்டையை சுழற்றியதால் டைபிரேக்கர் வரை சென்றது. ஒரு வழியாக டைபிரேக்கரில் அல்காரஸ் வென்றார். 3-வது செட்டில் அல்காரசின் கை ஓங்கியது. இதனால் நெருக்கடிக்குள்ளான ஜோகோவிச் பந்துகளை அதிகமாக வெளியே அடித்துவிட்டு தவறுகள் செய்தார். ஆனாலும் 5-வது கேமில் இருவரும் மாறி மாறி புள்ளிகள் சேர்த்ததால் அந்த கேம் மட்டும் இழுபறியாக 27 நிமிடங்கள் ரசிகர்களை பரவசப்படுத்தியது. அந்த கேமை அல்காரஸ் தனக்குரியதாக மாற்றியதும் செட்டும் அவரது கைக்குள் அடங்கியது. இருப்பினும் மனம் தளராமல் மல்லுக்கட்டிய ஜோகோவிச் 4-வது செட்டை வசப்படுத்தி சுடச்சுட பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது செட்டுக்கு நகர்ந்தது. பரபரப்பான கடைசி செட்டில் ஜோகோவிச் கடும் சவால் அளித்தாலும் துடிப்புடன் செயல்பட்ட அல்காரஸ் வெற்றிக்கனியை பறித்தார். 4 மணி 42 நிமிடங்கள் நீடித்த திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதல்முறையாக விம்பிள்டன் கோப்பையை உச்சிமுகர்ந்தார். இதன் மூலம் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார். 20 வயதான அல்காரஸ் வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2022-ம் ஆண்டில் அமெரிக்க ஓபனை வென்று இருந்தார். விம்பிள்டன் புல்தரை மைதானத்தில் ஜோகோவிச் தொடர்ச்சியாக 34 வெற்றிகளை பெற்றிருந்தார். அவரது வீறுநடைக்கு அல்காரஸ் முடிவு கட்டினார். அத்துடன் விம்பிள்டனை 8-வது முறையாக சொந்தமாக்கி, ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய எடுத்த அவரது முயற்சிக்கும் முட்டுக்கட்டை விழுந்தது. வாகை சூடிய அல்காரசுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.