நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், மோடி, அதானி ஆகியோர் மீதும் கடுமையான வாதங்களை முன்வைப்பவர்களில் முக்கியமானவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா. இவர், நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வியெழுப்புவதற்காக, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் பணம்,பரிசுப்பொருள்களை லஞ்சமாகப் பெற்றதாக பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.
அதோடு, மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான தனது லாகின் ஐ.டி-யை ஹிராநந்தனியும், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுதத்திக்கொள்ள மஹுவா மொய்த்ரா அனுமதித்தார் என்றும் நிஷிகாந்த் துபே கூறினார். இது குறித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு நிஷிகாந்த் துபே புகார் கடிதம் எழுதியதையடுத்து, இதில் நடவடிக்கை எடுத்த நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு, நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்புவோரால் தனது தலைமுடியைக்கூடத் தொட முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா கூறியிருக்கிறார். அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடமிருந்துபரிசுப்பொருட்களை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மஹுவா காட்டமாக பதில் அளித்துள்ளார்.