வக்ஃபு வாரிய சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அக்காசியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்த சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. அதனை வலியுறுத்தி நேற்றைய தினத்தில் எங்களுடைய தலைவர் விவரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகமும், எங்களது தலைவரும் என்றைக்கும் எப்போதும் உறுதுணையாக இருப்போம். இந்த சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்துதான் எதிர்க்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் எந்த விருப்பத்தை தெரிவிக்கிறார்களோ அதுபடி தான் அரசு இருக்க வேண்டுமே தவிர, இஸ்லாமியர்களை பாதிப்புக்கு உள்ளாக்கும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களுடைய தலைவரின் வழிகாட்டுதல் படி அடையாளப் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம். இஸ்லாமியர்களுக்கு எப்போதுமே நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்” என்றார்.