கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி கீழ கோவில்பட்டி வழியாக காட்டாறு செல்கிறது. தேசிய மங்கலத்தில் உற்பத்தியாகும் இந்த காட்டாறு வளையப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் இணைகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று காலை முதல் சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தும், சில இடங்களில் தொடர் கனமழையாகும் பெய்தது. தேசியமங்கலம் குப்பாச்சிப்பட்டி பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குப்பாச்சி பட்டி வேப்பங்குடி சாலையில் காட்டாற்றின் குறுக்கே சென்ற தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது. காட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு வேகமாக சென்ற போதிலும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் தரை பாலத்தை கடந்து சென்றனர். மழைக்காலங்களில் அடிக்கடி இந்த காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் பால் வியாபாரிகள், கால்நடை வளர்ப்பு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் காட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் மற்றும் வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.
மேலும் இப் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட வேண்டுமென கடந்த 9 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், எனவே தமிழக அரசு இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.