தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பொள்ளாச்சி ஆனைமலை வால்பாறை உள்ளிட்ட இடங்களில் பரவலாக அதிக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடைகாலத்தின் போது உணவு மற்றும் தண்ணீருக்காக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறிய வனவிலங்குகள் சாலைகளில் உலா வந்தன. தற்போது அதிக அளவில் மழை பெய்து ரம்யமான சூழல் நிலவுவதாலும், அடர் காட்டின் நடுவே கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறி சாலைகள் உலா வருகின்றன.
தற்போது நவமலை செல்லும் வனப்பாதையில் காட்டு யானை கூட்டம் குட்டிகளுடன் உலா வருகிறது. இதனை காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காட்டு யானை கூட்டம் சாலைகளில் உலா வருவதால் வனத்துறையினர் இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல தற்போது தடைவித்துள்ளனர். மேலும் யானை கூட்டம் இடம்பெயரும் வரை பொது போக்குவரத்தை மட்டுமே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.