தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடற்பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. தற்போது மணிக்கு 9 கி.மீட்டராக குறைந்ததுள்ளது. இது சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே 630 கி.மீ கிழக்கு தென்கிழக்கிலும், நெல்லூருக்கு 740 கி.மீ தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இது நாளை புயலாக வலுப்பெற்று நாளை மறுநாள் காலை தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழக – புதுவை கடலோர பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் டிச.5-ல் நெல்லூருக்கும் மசூலிப்பட்டணத்திற்கும் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும்’’ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.