கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள தர்மபுரத்தை சேர்ந்தவர் அழகேசன் என்கிற கண்ணன் (41). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அழகேசனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு, பிள்ளைகளுடன் ஆலங்குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்றதால் அழகேசன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். மேலும், மனைவியை சேர்ந்து வாழ அழைத்தபோது அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அழகேசனின் வீடு திறக்காமல் இருந்து வந்துள்ளது. மேலும், உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டில் அழகேசன் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலைத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அழகேசன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.