ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அருகே பூமாண்டகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி (28). பிஇ படித்துவிட்டு பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கல்லூரியில் படித்துபோது, கவுந்தபாடி அருகே உசின்னியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் மகன் மதன்குமார் (29) என்பவரை காதலித்தார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அந்தஸ்து காரணமாக காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு எதிர்ப்பை மீறி மதன்குமாரை பூரணி திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். பூரணி கருவுற்றதும் கடந்த சில மாதங்களாக கணவன் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பூரணிக்கு பெண் குழந்தை பிறந்தது. கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது, பூரணி திடீரென மயங்கி விழுந்ததாக கூறி கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து கவுந்தபாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பூரணியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், மனைவி பூரணியை மதன்குமார் தனது தாயார் பூங்கொடி, தந்தை யுவராஜ் ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் தலைமறைவானார்கள். இந்நிலையில் 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மதன்குமார் வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவர், பூரணி பணம் படைத்தவர் வீட்டு பெண் என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு, பூரணி அவரது பெற்றோரிடம், சொத்தில் பங்கு எதுவும் வேண்டாம் எனக்கூறி உள்ளார். பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து, மகளையும், பேத்தியையும் பார்க்க அவரது பெற்றோர் சென்றனர். அப்போது, மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி, சொத்து கேட்டு சண்டையிட்டு திருப்பி அனுப்பியுள்ளனர். பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு பூரணியிடம், மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் கூறியுள்ளனர். ஆனால் பூரணி ஏற்கவில்லை. சொத்து எதுவும் கிடைக்காது என முடிவு செய்த மதன்குமார், பூரணியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தாய்ப்பால் கொடுத்தபோது இறந்துவிட்டதாக நடகமாடியது தெரியவந்தது. இதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர். பூரணிக்கு பிறந்த குழந்தையையும் கொலை செய்துவிட்டு, மகனுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்யவும், திட்டமிட்டு இருந்து உள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.