அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திடீரென டில்லி புறப்பட்டு சென்றார். டில்லி விமான நிலையத்தில் அவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். முக்கியமானவர்களை பார்க்க டில்லி வந்தீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி, அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்தேன். முக்கியமானவர்கள் யாரையும் சந்திக்க வரவில்லை என்றார்.
இதற்கிடையே டில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் பேசினார். இவர்தான் எடப்பாடியை டில்லி வரவழைத்து அமித்ஷாவுடன் சந்திக்க ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக , பாஜக கூட்டணிக்கு வாசன் தான் ஏற்பாடு செய்துவருவதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியாகி விட்டால், அதிமுக சார்பில் ஒரு எம்.பி. பதவி தனக்கு மீண்டும் பெற்றுத் தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வாசன் இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து வருகிறாராம்.