கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறின. இதில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை10 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக, மஜத கூட்டணி அமைத்தாலும் ஆட்சி யை பிடிக்க முடியாத நிலையே காணப்பட்டது.
காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என கிட்டதட்ட முடிவாகிவிட்ட நிலையில், வழக்கம் போல முதல்வர் யார் என்பதற்கான போட்டி காங்கிரசில் தொடங்கி விட்டது.
சித்தராமையா மீண்டும் முதல்வர் பதவிக்கு குறிவைக்கிறார். அதே நேரத்தில் சோதனையான நேரத்தில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை கட்டி காத்த மாநில தலைவர் டி.கே. சிவகுமாரும் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறார். இந்த நிலையில், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்றும், அடுத்த முதல்-மந்திரி அவர் தான் எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் சித்தாபுரா பகுதிகளில் நேற்று விளம்பர பேனர்களை வைத்து, காங்கிரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதே வேளையில் ஏற்கனவே காங்கிரஸ் செயல் தலைவரும், லிங்காயத் சமுதாய தலைவருமான எம்.பி.பட்டீல் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் தானும் இருப்பதாக கூறியுள்ளார்.
அதுபோல் 91 வயதான காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனூர் சிவசங்கரப்பாவும் நேற்று முன்தினம் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் ஒரு பிரிவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேர்தல் முடிவு இன்று வெளியான நிலையில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு தலைவர்கள் இடையே போட்டா போட்டி எழுந்துள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.